என் பெயர் ஸ்தீஷ் குமார் டோக்ரா. தமிழகக் காவல் துறையில் ஓர் அதிகாரி.

பஞ்சாப் மாநிலத்தில் 1953ல் பிறந்த நான் படிப்பை முடித்து அமிரத்ஸர்ஸிலுள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் மொழியியல் விரிவுரையாளராக பணியாற்றத் தொடங்கினேன். சுமார் ஐந்து வருடங்களாக இந்தப் பணியைச் செய்த பின் 1982ல் இந்தியக் காவல் பணியில் தேர்ச்சிப் பெற்றேன். பயிற்சிகளை முடித்து 1984ல் தமிழ்நாட்டுக்கு வந்தேன்.

1984லிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிவதோடு பணி நிமித்தம் கற்றுக்கொண்ட தமிழ் மொழியை எழுத்து வாகனமாக ஏற்றுக் கொண்டு 1991ல் தமிழ் மொழியில் சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகியவற்றை எழுதி பத்திரிகைகளில் வெளியிட ஆரம்பித்தேன். என்னை ஊக்குவிப்பவர்கள் எண்ணற்றவர்கள் என்றாலும் மேலூர் கல்லூரியில் அந்தக் காலத்தில் பணி புரிந்து வந்த தமிழ் பேராசிரியர் அப்பா துரை மதுரை வானொலி இயக்குநர் திருவேங்கடம், மற்றும் காவல் துறை உயர் அதிகாரி ஶ்ரீபால் ஆகியவர்களின் பெயர்களை என்னால் நன்றியுடன் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

4-5 வருடங்களாக எழுதிய பிறகு தமிழில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். அப்பொழுது எனக்குத் தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாததால், பிறர் உதவியினை நாட வேண்டியிருந்தது.

இப்பொழுது 6-7 மாதங்களுக்கு முன் சென்னை வானொலி நிலையத்தில் பணி புரியும் நண்பர் நீலகண்டன் மீண்டும் என்னைத் தமிழில் எழுதத் தூண்டினார். அதற்குள் கணினிகள் வந்துவிட்டதால், தமிழில் தட்டச்சென்பது சுலபமாகிவிட்டது. யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் நாமே அச்சடித்து இ-மெயில் மூலம் அனுப்பிவிட இயலுகிறது.

நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசையை நிறைவேற்ற “குடும்பமே கோயில்” என்னும் எனது முதல் தமிழ் நூலை எழுதினேன்.

இப்பொழுது “தங்கம்” பத்திரிகையில் ‘சிக்கல்’ என்ற ஒரு நாவலினையும் “ராணி” பத்திரிகையில் ‘சாயல்’ என்ற ஒரு நாவலினையும் தொடர்கதைகளாக வெளியிட்டு வருகிறேன்.

இந்த நாவல்களின் முன் பகுதிகளை ஒருவேளை நீங்கள் படிக்காமல் விட்டிருந்தால், உங்கள் வசதிக்காக இந்த நாவல்களின் இதுவரை வந்திருக்கும் அத்தியாங்களை இந்த வலைப்பூக்களில் பதிவு செய்யப் போகிறேன்.

‘சாயல்’ நாவலைப் படிக்கச் சொடுக்கவும்

என்னைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் dogratamil@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

Advertisements